மாணவிகளுக்கு இப்படியொரு பாலியல் துன்புறுத்தலா? அம்பலமான ஆனைமலை பயங்கரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவற்றை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சில கொடூரமான சித்ரவதை வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று இனி நடக்காத வகையில் கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்த ரணம் ஆறுவதற்குள் அம்மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சபீர்.

இவருடைய நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகியோர் ஆவர். இவர்கள் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிவர். தங்கள் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்குமாறு பின் தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளனர்.

அவர்கள் மறுப்பு தெரிவிக்கும் போது, தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் செல்லும் வழிகளில் நின்று கொண்டு, கைகளை பிடித்து இழுப்பது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது என தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை அப்படியே செல்போனில் படம்பிடித்துள்ளனர். இவற்றை இணையத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த விஷயம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் பெற்றோரையும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது, பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.- Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.