காலி குடங்களுடன் இரவு-பகலாக தண்ணீருக்காக பரிதவிக்கும் சென்னை மக்கள்..!


சென்னை மக்கள் காலி குடங்களுடன் இரவு-பகலாக தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி உள்ளது. குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகள் வறண்டு பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் நகர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் அன்றாடம் போராடி வருகிறது. எனினும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சினை பூதாகர பிரச்சினையாக மாறி வருகிறது.

வீடுகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், குடிநீர் லாரிகளை மட்டுமே நம்பி சென்னை மக்கள் அன்றாட வாழ்க்கையை கழிக்கும் நிலை இருக்கிறது. எனவே சாலைகள் மற்றும் தெருக்களில் தனியார் மற்றும் குடிநீர் வாரிய ஒப்பந்த குடிநீர் லாரிகள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

குடிநீரேற்று நிலையங்களில் வினியோகிக்கப்படும் தண்ணீரை பிடிப்பதற்கு மக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மோட்டார் சைக்கிள்கள், தட்டு ரிக்‌ஷாக்கள், ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து மக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

இரவு-பகல் பாராமல் தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. தண்ணீர் பிரச்சினையால் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று ‘ஒருபுறம் வாட்டி வதைக்கும் வெயில், மற்றொரு புறம் தண்ணீர் தட்டுப்பாடு’ என்று சென்னை மாநகர மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.

‘நீலத்தடி நீர் முற்றிலும் வற்றி போனதால் குடிப்பதற்கு மட்டுமின்றி குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை கழுவுவதற்கும் தனியார் லாரிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் 25 லிட்டர் மினரல் தண்ணீர் கேன்களை பயன்படுத்துகிறார்கள்.

குளிப்பதற்கு தாராளமாக தண்ணீர் பயன்படுத்தியவர்கள் இன்றைக்கு ‘காக்கா’ குளியல் போடுகிறார்கள். அன்றாடம் துணி துவைப்பதை தவிர்ப்பதற்காக ஒரு சிலர் ஒரே ஆடையை 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் அணிந்து செல்கிறார்கள்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தண்ணீர் பிரச்சினை நீடித்தால் மதிய உணவு நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள காட்சி.

சமையல் செய்வதற்கு மட்டுமின்றி, பாத்திரங்களை கழுவுவதற்கும் தண்ணீர் தேவை இருப்பதால் ஒரு சில குடும்பங்கள் 3 வேளையும் ஓட்டல் உணவை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஓட்டல்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் கட்டணம் ‘கிடுகிடு’வென அதிகரித்திருப்பதால், ஓட்டல்கள் மூடப்படும் என்ற பீதி கிளம்பி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தண்ணீர் பிரச்சினை நீடித்தால் மதிய உணவு நிறுத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்களிடம் கை கழுவுவதற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று ஊழியர்கள் பணிவான வேண்டுகோள் விடுக்கிறார்கள். லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை பெருங்குடி, சோழிங்கநல்லூர், தரமணி போன்ற இடங்களில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐ.டி. நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் தண்ணீர் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது.

மேலும் அன்றாடம் தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளதால் ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். இதையடுத்து ஒரு சில ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளன.

ரெயில் பெட்டிகளை பராமரிப்பதற்கும், பயணிகளின் தேவைகளுக்காகவும் செங்கல்பட்டில் இருந்து ரெயில் மூலம் சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. கழிவுநீரை சுத்திகரித்து ரெயில் பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. ரெயில்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ரெயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அவ்வப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!