அடுத்த 3 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாதம் கடைசி வாரத்திலோ அல்லது ஜூன் முதல் 5 வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது.

கடந்த 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) புயலாக மாறுகிறது. எனவே அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.


இந்த புயல் மேலும் வடக்கு, வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து குஜராத் நோக்கி செல்கிறது. இந்த புயலினால் கடல் பகுதியில் மட்டும் தான் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

இந்த பருவமழை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இயல்பை விட குறைவாகவே இருக்கும். இப்போது உருவாகி இருக்கும் புயலை தொடர்ந்து, தென்மேற்கு பருவகாற்று வேகம் அதிகரித்து மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!