முந்திரி தோப்பில் நள்ளிரவில் பெண்களுடன் மது விருந்து; போதையில் ஆபாச நடனம், 15 பேர் கைது..!


புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது.

இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால் ஆரோவில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுடன் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மின்விளக்கு அலங்காரம், ஒலிபெருக்கி வசதிகளுடன் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மது விருந்துடன் இந்த டி.ஜே. நடன நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது சிலருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களும் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போதையில் அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினர்.

இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நள்ளிரவில் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தார். போலீசாரை பார்த்ததும், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த சிலர் உஷாராகி, தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். சில இளம் பெண்களையும், சில வெளிநாட்டினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னையை அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் யுவராஜ், அவரது நண்பர்களான கோவையை சேர்ந்த பால்சன் என்பவரின் மகன் ஹஜி, காஞ்சீபுரத்தை சேர்ந்த தவுலத்ஷா மகன் அலி ஆகியோர் உள்பட 15 பேர் இந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடன நிகழ்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மின்சாதன பொருட்கள், சரக்கு வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் நடன நிகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது, இசை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆலங்குப்பத்தை சேர்ந் கோவிந்தசாமியின் மகன் பலராமன், லிக்கித், பிரபு, ராமச்சந்திரன், பாலாஜி, நாகப்பன், கூலி தொழிலாளர்களான செல்வம், குமார், அய்யப்பன், முத்து, சரண்ராஜ், பூபாலன், சுரேஷ் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை அருகே நள்ளிரவில் போதை விருந்துடன் நடந்த இந்த ஆபாச நடன நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!