மாயமான விமானத்தில் விமானி.. கட்டுப்பாட்டு அறையில் மனைவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!


சீன எல்லை அருகே விமானம் மாயமானபோது விமான கட்டுப்பாட்டு அறையில் விமானியின் மனைவி பணியாற்றியது நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து கடந்த திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் உள்ள சீன எல்லை அருகே தரையிறங்க இருந்த நிலையில் திங்கள்கிழமை அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 3 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காணாமல் போன விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (27) அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்த மோகித்தின் தந்தை சுரீந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

இந்த விமானத்தில் சென்று மாயமானவர்களில் ஹரியானாவை சேர்ந்த ஆசிஷ் தன்வார் (29) என்ற விமானியும் பயணித்துள்ளார். ஜோர்கத்திலிருந்து விமானம் புறப்பட்டபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் அவர் மனைவி பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் ஆசிஷ் தன்வாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. சந்தியாவும் விமான படையில் பணியாற்றுகிறார். அந்த விமானம் ஜோர்கத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் சந்தியா இருந்தார்.

அவர்தான் எங்களுக்கு தகவல் சொன்னார். முதலில் சீன எல்லையில் எங்காவது அவசரமாக தரையிறங்கியிருக்கும் என நினைத்தோம். ஆனால் அது மலையில் எங்காவது மோதி விபத்தில் சிக்கியிருக்கும் என்ற தகவல் எங்களுக்கு பேரிடியை கொடுக்கிறது. இந்த தகவல் அறிந்த ஆசிஷின் தந்தை அசாம் சென்றுள்ளார். விமானம் காணாமல் போன போது மனைவியே கட்டுப்பாட்டு அறையில் இருந்த சம்பவம் கேட்போர் மனதை உலுக்குகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!