ஐஏஎஸ் தேர்வு எழுத ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வந்த சாதனை பெண் – கேரளாவில் நெகிழ்ச்சி..!


கேரள மாநிலத்தில் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஐஏஎஸ் ஆகும் தனது லட்சியத்தை அடைய ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வந்து தேர்வு எழுதினார்.

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய பெண்- லட்சியத்தை அடைய போராட்டம்

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷா அன்சாரி(24). இவர் பிறக்கும்போதே மிகவும் அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவராவார்.

இவருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது. இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளனர். ஷெஹினுக்கு இது மூன்றாவது தேர்வு. லதீஷாவுக்கு இது முதல்தேர்வு.


சில தினங்களுக்கு முன் லதீஷாவின் நிலைமை குறித்து பல்வேறு பத்திரிக்கைகளில் தகவல்கள் வலம் வந்தன. லதீஷா, சில காலங்களாக சரியான சுவாசமின்றி சிரமப்பட்டு வந்தார். அவருக்கு தடையற்ற ஆக்ஸிஜன் சப்ளே தேவைப்பட்டது.

அவரால் ஆக்ஸிஜன் சப்ளே இன்றி சாப்பிடக்கூட முடியாத நிலையும் உருவானது. இதையடுத்து கோட்டயம் கலெக்டரிடம் இது தொடர்பாக லதீஷாவின் தந்தை மனு அளித்திருந்தார்.

இதில் லதீஷா ஐஏஎஸ் தேர்வு எழுத உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து அரசு சார்பில் அவருக்கான உதவி, ஐஏஎஸ் தேர்வு எழுத தேர்வறைக்கு சென்றபோது வழங்கப்பட்டது. லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் நேற்று தேர்வு எழுதினார். அங்கு வந்த அரசு அதிகாரிகள், அவரது வீல் சேருக்கு பின்புறம் ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தினர்.


இது குறித்து லதீஷா கூறுகையில், ‘இப்போது நான் நலமாக உணர்கிறேன். ஓராண்டாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். எனது லட்சியத்தை நிச்சயம் எட்டுவேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என புன்சிரிப்புடன் கூறினார்.

மேலும் லதீஷா தனது செல்போனில் இருந்த அவரது படைப்பில் உருவாக்கப்பட்ட கண்ணாடி ஓவியங்கள், கீபோர்ட் வாசித்த வீடியோக்கள் என காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியும் இருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!