நிறுவன ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – கள்ளக்காதலுக்காக கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்..!


தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியே கூலிப்படையை ஏவி கணவனை கொன்றது அம்பலமாகி உள்ளது.

படுகொலை
மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே பிளிகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்காடனஹள்ளி கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது சிவக்குமார்(வயது 26) என்பதும், அவர் மைசூரு குங்க்ரால் சத்திரம் பகுதியில் தனது மனைவி திவ்யாவுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவக்குமாரை, அவருடைய மனைவி திவ்யா, கள்ளக்காதலன் சேத்தன் உள்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவக்குமாரின் மனைவி திவ்யாவை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெற்றோர் எதிர்ப்பு

அதாவது, மைசூரு மாவட்டம் குங்க்ரால் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(22). இவருக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள பன்னங்கடி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விவகாரம், திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் திவ்யாவை, மண்டியா மாவட்டம் உளிகெரே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்கு பிறகு திவ்யாவும், சிவக்குமாரும் மைசூரு மாவட்டம் குங்க்ரால் சத்திரம் பகுதியில், வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். சிவக்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் சிவக்குமார் தனது மனைவி திவ்யாவுக்கு அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு செல்போனை பரிசளித்தார். அந்த போனை பயன்படுத்தி வந்த திவ்யா, அந்த செல்போனில் முகநூல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் மீண்டும் தனது பழைய காதலன் சேத்தனை தொடர்பு கொண்டார். இதையடுத்து மீண்டும் இருவரும் பழகத்தொடங்கினர். இதன்மூலம் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையடுத்து சேத்தன் அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கே சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். சிவக்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் இவர்கள் தங்களுடைய கள்ளக்காதல் உல்லாச வாழ்க்கையை அரங்கேற்றி வந்தனர்.

கண்டுகொள்ளவில்லை

இதுபற்றி அக்கம்பக்கத்தினரும், அப்பகுதியில் உள்ள சிவக்குமாரின் உறவினர்களும் திவ்யாவிடம் கேட்டனர். அப்போது அவர், சேத்தன் தன்னுடைய தூரத்து உறவினர் என்றும், அவர் தனக்கு அண்ணன் ஆவார் என்றும் கூறி நம்ப வைத்தார்.

ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், ஒருமுறை அவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவர்கள் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தனது மனைவி மீது கொண்ட நம்பிக்கையால் அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் அவர் இதுபற்றி சேத்தனிடமும் கேட்கவில்லை.

சதித்திட்டம்

ஒரு கட்டத்தில் சிவக்குமார், தனது மனைவி திவ்யாவையும், அவருடைய கள்ளக்காதலன் சேத்தனையும் அழைத்து கள்ளக்காதலை கைவிட்டுவிடும்படி கண்டித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திவ்யா திட்டமிட்டார். இதுபற்றி அவர் தனது கள்ளக்காதலன் சேத்தனிடம் கூறினார். அவரும், சிவக்குமாரை கொலை செய்ய ஒப்புக் கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி சிவக்குமாரை கொலை செய்திட சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

அதையடுத்து சேத்தன், பிரபல ரவுடியுமான பரத் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய கூலிப்படையை கொலை திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். பின்னர் பரத் மற்றும் கிருஷ்ணாவை சந்தித்த திவ்யா, கொலை திட்டத்தை அரங்கேற்றிட முன்பணம் கொடுத்துள்ளார். பின்னர் திவ்யா உள்பட 4 பேரும் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்திட திட்டம் தீட்டினர்.

கைது

அதையடுத்து கடந்த மாதம்(மே) 29-ந் தேதி சேத்தன் உள்பட 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரை பிளிகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்காடனஹள்ளி கிராமத்திற்கு கடத்திச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் சிவக்குமார் விபத்தில் பலியானது போன்று சித்தரித்துள்ளனர். அதையடுத்து சேத்தன், சிவக்குமாரை கொலை செய்துவிட்டது குறித்து தனது கள்ளக்காதலி திவ்யாவிடம் கூறிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர் தனது கணவரை காணவில்லை என்று கூறி திவ்யா நாடகமாடி உள்ளார். ஆனால் அவருடைய நடவடிக்கையில் சிவக்குமாரின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிவக்குமார் காணாமல் போனது குறித்தும், திவ்யாவின் நடவடிக்கை குறித்தும் உன்சூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உன்சூர் புறநகர் போலீசார் சிவக்குமாரை தேடி வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திவ்யாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சேத்தனையும் கைது செய்தனர்.

பரபரப்பு

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடி பரத் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!