ஓகி புயல் – கேரளாவில் 12 சடலங்கள் கண்டுபிடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்வு…!


தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30-ந் தேதி தாக்கிய ‘ஒகி’ புயலால் பெருத்த சேதம் விளைந்தது. இந்த புயலில் சிக்கி கணிசமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிலையில், சில மீனவர்களின் பிணங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் நேற்று புதன்கிழமை மட்டும் 12 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது, இதனையடுத்து மாநிலத்தில் புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 66 ஆக உயர்ந்து உள்ளது.


இப்போது வரையில் 39 சடலங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா கடற்பகுதியில் புயல் தாக்கிய பின்னர் 2,844 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

திருவனந்தபுரத்தில் கேரள மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசுகையில், மாயமான மீனவர்களை தேடும் பணியானது தொடர்ச்சியாக நடைபெறும், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபடும் என மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சிதாராமன் உறுதியளித்து உள்ளார் என கூறிஉள்ளார்.

கடற்பகுதியில் காணப்பட்ட சடலங்கள் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது, அங்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என செய்தி வெளியாகி உள்ளது. – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!