குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய முஸ்லிம் தம்பதி – பா.ஜனதா வென்ற நாளில் நடந்த சுவாரஸ்யம்..!


நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 23-ந்தேதி உத்தரபிரதேசத்தின் கொண்டா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக் அகமது-மைனாஸ் பேகம் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என பிரதமரின் பெயரையே சூட்டியுள்ளனர்.

இது குறித்து அமீரகத்தில் பணியாற்றும் முஸ்தாக் அகமது கூறுகையில், ‘குழந்தை பிறந்த செய்தியை கடந்த 23-ந்தேதி என்னிடம் மனைவி கூறியபோது, தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றாரா? எனக்கேட்டேன். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார். உடனே நான், நாட்டில் மோடி ஆட்சிக்கு வந்திருக்கிறார். அப்படியே நமது குடும்பத்திலும் மோடி வந்திருக்கிறார் என்று கூறினேன்’ என்றார்.

இதைக்கேட்டவுடன் தனது குழந்தைக்கு மோடியின் பெயரையே சூட்டுவதில் மைனாஸ் பேகம் உறுதியாக இருந்துள்ளார். அவரது மனதை மாற்ற அண்டை வீட்டினர் கடுமையாக முயன்றனர். ஆனால் தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். முஸ்தாக் அகமது கூட மனைவியின் விருப்பத்தை தட்டிக்கழிக்க முயன்று தோற்றுப்போனதாக அவரது தந்தை இத்ரீஸ் கூறியுள்ளார்.

தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக கொண்டா மாவட்ட அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் ஒன்றை மைனாஸ் பேகம் தாக்கல் செய்துள்ளார். அதில் ஏழைகளுக்கு இலவச சமையல் கியாஸ் திட்டம், கழிவறை திட்டம், முத்தலாக் தடை சட்டம் போன்ற மோடியின் திட்டங்களை அவர் பாராட்டி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!