நிச்சயமாக வெற்றி பெறுவோம்.. 2 ஆயிரம் கிலோ இனிப்புக்கு ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்..!


நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்க, பல வகை இனிப்புகளை தயாரிக்கும் பணியில் மோடி முகமூடியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிரபல நடிகை ஊர்மிளா மட்டோன்கர் களமிறங்கியுள்ளார்.

இருவருக்கும் இடையில் இங்கு கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகிவரும் தகவல்கள் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 23-ம் தேதி மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து, பிரதமர் மோடியின் முகமூடிகளை அணிந்தவாறு நூற்றுக்கணக்கானவர்கள் லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!