இன்ஸ்டாகிராமில் கருத்து கேட்டு உயிர் விட்ட இளம்பெண்.. மலேசியாவில் துயரம்..!


சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கருத்து கேட்பு நடத்தி, மலேசிய இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த 16 வயதே நிரம்பிய இளம்பெண் ஒருவர், கடந்த திங்கட்கிழமையன்று இன்ஸ்டாகிராமில் தன்னை ஃபாலோ செய்பவர்களிடம் வித்தியாசமான கேள்வியை முன்வைத்தார்

டேவியா எமிலியா என்ற அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உண்மையிலே இது மிகவும் முக்கியமானது. இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு நீங்கள் உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா என அதிர வைக்கும் கேள்வியை தனது ஃபாலோயர்களிடம் வோட்டிங் முறையில் கேட்டிருந்தார்.

பொதுவாக யாரும் இது போன்ற கேள்விகளை சீரியசாக கேட்பதில்லை. பெரும்பாலும் டைம் பாஸ்காகவும், காமெடியாகவும் தான் கேட்பர். அப்படி நினைத்து தான் இந்த கேள்விக்கு அந்த இளம்பெண்ணின் சுமார் 69 சதவீத ஃபாலோயர்கள், டெட் என்பத குறிக்கும் டி என்ற எழுத்தை கிளிக் செய்து சாகலாம் என கூறியிருந்தனர்.

லைவ் என்பதை குறிக்கும் எல் என்ற எழுத்தை 31 சதவீதம் பேர் கிளிக் செய்தனர். இதனையடுத்து பெரும்பான்மையான ஃபாலோயர்களின் கருத்தை மனதில் வைத்து கொண்டு, அந்த பெண் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் மலேசியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு மலேசிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட இளம்பெண்ணின் சாவுக்கு ஓட்டெடுப்பில் சாகலாம் என கூறியவர்களும் ஒரு காரணம் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார். மலேசியச் சட்டப்படி 18 வயத்துக்குட்பட்டோரை தற்கொலை செய்யத் தூண்டுவோருக்கு மரண தண்டனையோ, 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் நிறுவனம் இணையதளத்தில் சுய சித்திரவதை காட்சி இடம்பெறுவதை தடை செய்துள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!