பட்டப்பகலில் நடுரோட்டில் இன்ஸ்பெக்டருடன் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை..!


ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் நேற்று பிற்பகல் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக விறகு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை நிறுத்தினார். ஆனால் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி சென்று நிறுத்தி உள்ளார்.

இதனால் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாகனத்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தள்ளி வந்து நிறுத்தியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சரக்கு வாகனத்தை எடுக்க விடாமல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் அவருடன் தகராறில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசினாராம்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு முற்றி ஒருவரை ஒருவர் கீழேதள்ளி கட்டிப்புரண்டு சண்டைபோடும் அளவிற்கு சென்றது. அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை, சரக்கு வாகன டிரைவர் அவரது கழுத்தில் கடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உடன் இருந்த போலீசார் இருவரையும் பிரித்து போலீஸ் இன்ஸ்பெக்டரை மீட்டதோடு டிரைவரை மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கழுத்து பகுதியில் தையல் போடப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து மினி சரக்கு வாகன டிரைவர் உச்சிப்புளி துத்திவலசையை சேர்ந்த சேதுராமன் மகன் கர்ணன் மாரியப்பனை (வயது 52) கைது செய்தார்.

இவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து காயப்படுத்தி தரக்குறைவாக பேசி கொலைமுயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடுரோட்டில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரோடு டிரைவர் ஒருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கழுத்தில் கடித்து வைத்த சம்பவம் வாட்ஸ்-ஆப் மூலம் பரவி பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. -Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!