காழ்ப்புணர்வு தாக்குதலுக்கு ஆளான இந்திய சிறுமி சிகிச்சைக்கு இத்தனை கோடி நிதியா..?


அமெரிக்காவில் ஏப்ரல் 23-ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்னிவேலி என்ற இடத்தில் சாலையை கடந்து கொண்டிருந்த இந்திய குடும்பம் மீது, ஈராக் போரில் பங்கேற்ற அமெரிக்க வீரரான ஏசாயா பியூப்பிள்ஸ் (34) என்பவர் காரை மோத செய்தார். இதில் இந்திய வம்சாவளி சிறுமி திரிதி நாராயண் (வயது 13), அவருடைய குடும்பத்தார் பலத்த காயம் அடைந்தனர்.

திரிதி நாராயணையும், அவரது குடும்பத்தினரையும் முஸ்லிம் என கருதி பியூப்பிள்ஸ் காரை மோத செய்து தாக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதில் தலையில் காயம் அடைந்த சிறுமி திரிதி நாராயணன், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்திய ஏசாயா பியூப்பிள்ஸ் கைது செய்யப்பட்டு, சாண்டா கிளாரா நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் மருத்துவ செலவுக்காக ‘கோபண்ட்மீ’ என்ற பெயரில் இணையதளத்தில் பக்கம் தொடங்கி நிதி சேகரிக்கப்படுகிறது. 8 நாளில் 6 லட்சத்து 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.4.25 கோடி) திரண்டுள்ளது. 5 லட்சம் டாலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் தாண்டி வசூலாகியுள்ளது. சிறுமியின் மருத்துவ உதவிக்கு கூடுதல் நிதி தேவையென்றுதான் உதவியை நாடினோம் என கூறிய இணையதளம் உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளது. 12,360 பேர் உதவி செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!