சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் 3-ம் இடம் பிடித்து தமிழக மாணவி சாதனை..!


மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை மாணவ-மாணவிகள் சிரமமின்றி எழுதுவதற்கு வசதியாக நாடு முழுவதும் 4 ஆயிரத்து 974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 299 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். இவர்களில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 78 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளன. எனவே தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னதாகவே பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.

cbseresults.nic.in, cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 17 லட்சத்து 61 ஆயிரத்து 78 மாணவர்களில், 16 லட்சத்து 4 ஆயிரத்து 428 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒட்டுமொத்த அளவில் 91.1 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 86.7 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 4.4 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

92.45 சதவீதம் மாணவிகளும், 90.14 சதவீதம் மாணவர்களும், திருநங்கைகள் 94.74 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 2.31 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

13 மாணவ-மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 25 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், 59 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து உள்ளனர்.

முதல் 3 இடங்களில் சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதிய 13 மாணவ-மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் அடங்குவார். அந்த மாணவியின் பெயர் பி.காவியா வர்ஷினி. கோவை மாவட்டம் புளியங்குளம் சாலையில் உள்ள வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியில் படித்தவர். இவர் 497 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

தேர்ச்சி விகிதத்தில் 99.85 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. 99 சதவீத தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் 2-ம் இடத்தையும், 95.89 சதவீத தேர்ச்சி பெற்று அஜ்மீர் மண்டலம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. பஞ்ச்குலா, பிரயாக்ராஜ், புவனேசுவரம், பாட்னா, டேராடூன், டெல்லி, கவுகாத்தி மண்டலங்கள் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்திருக்கின்றன.

கடந்த 2-ந்தேதி வெளியாகிய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் தேர்ச்சி விகிதத்தில், முதல் 2 இடங்களை திருவனந்தபுரம் மற்றும் சென்னை மண்டலங்கள் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!