நடுரோட்டில் கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை… அதிர வைத்த காரணம்..!


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 53). இவர் திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அதுமட்டுமின்றி கட்டிட வேலைக்கான ஆட்களை அழைத்து செல்லும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கட்டிட பணிக்காக அவர் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அப்போது 60 அடி ரோடு சந்திப்பில் பூங்கா அருகே பெண் ஒருவரை கட்டிட சித்தாள் பணிக்காக தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். இந்த நிலையில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆரோக்கியசாமி வந்த மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்னர் வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பாக அவர் ஆரோக்கியசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்கள் இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியசாமியை சரமாரியாக குத்தினார். இதை பார்த்து மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் அலறியபடியே அதை தடுக்க முயன்றார். இருப்பினும் ஆரோக்கியசாமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேஸ்திரியை தன் கண் முன்னே மற்றொருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததை பார்த்த அந்த பெண் பயத்தில் அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கத்தியால் குத்திய நபர், பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்தும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த ஆரோக்கியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் (35) என்பவரும் கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து சென்று வந்து உள்ளார். தொழிலாளர்களை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதில் ஆரோக்கியசாமிக்கும், அறிவழகனுக்கும் இடையே தொழில் போட்டி நிலவியது. இதனால் அடிக்கடி அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்டு. இந்த நிலையில் நேற்று இருவருக்கு இடையே ஏற்பட்ட தொழில்ரீதியான தகராறில் ஆத்திரம் அடைந்த அறிவழகன், ஆரோக்கியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் என்பது தெரிய வந்தது. இருப்பினும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். தப்பி ஓடிய அறிவழகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூரில் நடுரோட்டில் வைத்து கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!