இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட ஏனைய 600 பேர் நாடு கடத்தல் – இலங்கை அரசு அதிரடி..!


இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. உலக நாடுகளை உலுக்கிய இந்த தற்கொலை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, ராணுவத்துக்கும், போலீசாருக்கும் அதிக அதிகாரம் கொடுத்து குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை வேட்டையாட பணித்து உள்ளது. அதன்படி இந்த தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டினருக்கான குறிப்பாக மத பிரசாரகர்களுக்கான விசா நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த 600 பேர் அதிரடியாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இதில் 200 பேர் இஸ்லாமிய மதகுருக்கள் ஆவர். அவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சட்டப்பூர்வமாக இலங்கைக்கு வந்திருந்தாலும், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் அவர்களின் விசா காலம் முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை மந்திரி வஜிரா அபய்வர்தனே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘வெளிநாட்டு மதகுருக்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக உள்ளன. அவர்களால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சமீப காலமாக பல நிறுவனங்கள் காளான் போல முளைத்துள்ளன. அவற்றில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் எந்த நாட்டினர்? என்ற விவரத்தை உள்துறை மந்திரி வெளியிடவில்லை. ஆனால் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு நடத்தப்பட்ட சோதனையில், வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான் போன்ற நாட்டினர்தான் விசா காலத்தை தாண்டியும் தங்கியிருந்ததை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!