கடன் தகராறில் போட்டி போட்டு தீக்குளித்ததில் 2 பெண்கள் உடல் கருகி மரணம்..!


நாகர்கோவில் சரலூரை சேர்ந்தவர் சங்கரகுமார், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அம்பிகா (வயது 55), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். அம்பிகா நடத்தி வந்த சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ராமன்புதூரை சேர்ந்த தங்கம் (54) என்பவரும் உறுப்பினராக இருக்கிறார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுயஉதவிக்குழு மூலமாக ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அவர் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனினும் அம்பிகா விடாமல் தொடர்ந்து கடனை திருப்பி கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தங்கம் தான் வாங்கிய கடன் ரூ.4 லட்சத்தை நேற்று தனது வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு அம்பிகாவிடம் கூறியுள்ளார். அதன்பேரில் அம்பிகா சுயஉதவிக்குழு உறுப்பினர் உஷா என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று மதியம் தங்கத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அம்பிகா எதிர்பார்த்தது போல கடனை திரும்ப கொடுக்கவில்லை. தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று தங்கம் கூறியுள்ளார். இதனால் அம்பிகாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்படியே எத்தனை நாட்கள் ஏமாற்றுவாய்… என்று கூறியபடி தங்கத்தை, அவர் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த தங்கம் திடீரென வீட்டுக்குள் ஓடினார். சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய் கேனை தூக்கி வந்து அம்பிகா மற்றும் உஷாவின் கண் எதிரே தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடலில் இருந்து மண்எண்ணெய் வடிந்தோடியபடி நின்ற தங்கத்தை பார்த்து அம்பிகா அதிர்ச்சி அடைந்தார். உடனே தங்கம் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை அம்பிகா பிடுங்கினார். பின்னர் அதில் இருந்த மீதி மண்எண்ணெயை அம்பிகா தன் உடலில் ஊற்றினார். 2 பெண்களும் போட்டி போட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்த உஷா பதறி போனார்.

இதனால் அவர், 2 பேர் மீதும் தண்ணீர் ஊற்றலாம் என நினைத்து வீட்டின் பின்பக்கம் சென்றுள்ளார். ஆனால் அதற்குள் தங்கம் தன் உடலில் திடீரென தீயை பற்ற வைத்தார். ஆனால் அப்போது அம்பிகாவும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி இருந்ததால் தீ அவர் மீதும் பற்றியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி இருவரும் அலறினர். சத்தம் கேட்டு உஷா ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார்.

இதில், தீயில் கருகி அம்பிகா சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கத்தின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி நேசமணிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை அணைக்க முயன்ற உஷாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. எனவே அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த போது, வீட்டின் அதே அறையில் உள்ள கட்டிலில் தங்கத்தின் 1½ வயது பேரனும் இருந்தான். அப்போது அதிர்ஷ்டவசமாக குழந்தையின் மீது தீ பற்றவில்லை. நல்ல வேளையாக குழந்தையின் உயிர் தப்பியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!