குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்..!


நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது.

இதனால் அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் அதே ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகினார். அதனை தொடர்ந்து, அக்கட்சியின் செல்வாக்கு மிக்கவரும், ஆக்லாந்தின் ஆல்பர்ட் மவுண்ட் தொகுதியின் பெண் எம்.பி.யுமான ஜெசிந்தா தலைவர் பதவியை ஏற்றார்.

பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது.

ஜெசிந்தா பிரதமராக பதவி ஏற்றார். 37 வயதில் பிரதமரானது மூலம் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார்.

பெண்ணியவாதியான ஜெசிந்தா பிரதமர் ஆவதற்கு முன்பு, தனியார் தொலைக் காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டுடன் காதல் வயப்பட்டார். 2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினை தொடர்பாக ஜெசிந்தாவை, கிளார்க் கேபோர்டு சந்தித்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இந்த ஜோடிக்கு காதல் பரிசாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானில் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெசிந்தா நாட்டு பிரச்சினைகளை பார்க்க வேண்டியிருப்பதால், கிளார்க் கேபோர்டு தனது தொகுப்பாளர் பணியை துறந்துவிட்டு, வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் திருமணத்துக்கு நிச்சயம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஈஸ்டர் விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயம் நடந்ததாக ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!