மழை வேண்டி சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட முஸ்லிம் பெண்..!


சாம்ராஜ்நகரில் மழை வேண்டி சிவனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முஸ்லிம் பெண் ஒருவர் கலந்து கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஆறு, குளம், குட்டைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் ஏரி, அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் மிகவும் குறைவான மழை பெறும் பகுதியாக சாம்ராஜ்நகர் மாவட்டம் திகழ்கிறது. இந்த மாவட்ட மக்களும், விவசாய பாசனத்திற்கு விவசாயிகளும் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.

கோடை காலம் தொடங்கிவிட்டதால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சாம்ராஜ்நகர் டவுனை சேர்ந்த மக்கள் மழை வேண்டி சிவனுக்கு சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள சாமராஜேஸ்வரா கோவில் முன்பு சிவன் சிலை வைத்து வருண பகவானை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் அந்தப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மழை வேண்டி சிவன் சிலை மீது அபிஷேகம் செய்தனர்.

அதுபோல் அதே பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், மழை வேண்டி சிவனுக்கு அபிஷேகம் செய்து நூதன வழிபாடு நடத்தினார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த முஸ்லிம் பெண் கூறுகையில், மழை பெய்ய வேண்டும் என்று சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் எதிர்பார்க்கிறோம். மதங்கள் வேறு வேறாக இருந்தாலும், அனைத்தும் ஒரே கருத்துகளை தான் வலியுறுத்துகிறது. எனவே, மழை வேண்டி நடந்த பூஜையில் கலந்துகொண்டேன் என்றார்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, ஆலமரம் மற்றம் அரசமரத்திற்கு திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!