ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தந்தை- மகள்..!


புதுவையில் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தந்தையும், மகளும் தேர்ச்சி பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுவை அருகே கூடப்பாக்கம் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 46). பொதுப்பணித்துறை ஊழியர். இவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்ததால் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.

இதனால் படித்து பதவி உயர்வு பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 2017-ம் ஆண்டு 8-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன்பின் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில் அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். மற்ற 3 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

பின்னர் தொடர் முயற்சியால் ஜூன் மாதம் நடந்த துணை தேர்வில் 3 பாடங்கள் எழுதினார். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார். அதன்பின் செப்டம்பர் மாதம் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கான தேர்வை எழுதினார். ஆனால் அப்போது தோல்வி அடைந்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இதே பாடங்களுக்கான தேர்வு எழுதினார். அதே நேரத்தில் அவருடைய மகள் திரிகுணாவும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.

நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் திரிகுணா 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், கணித பாடங்களில் தேர்வு எழுதிய அவரது தந்தை சுப்ரமணியனும் தேர்ச்சி பெற்றார்.

ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தந்தையும், மகளும் தேர்ச்சி பெற்றதற்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!