பழி தீர்ப்போம்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி வெளியிட்ட வீடியோ


ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பு தொடக்கத்தில் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் அந்த அமைப்பில் பலர் இணைந்தனர்.

எனினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தங்கள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் இழந்தனர். எனினும், இப்போது தலைமறைவாக இருந்தபடி அவ்வப்போது வெடிகுண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களை அந்த அமைப்பினர் நிகழ்த்தி வருகின்றனர்.அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அந்த அமைப்பின் தலைவரான அல்-பாக்தாதி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அமெரிக்காவின் தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும், அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அல்-பாக்தாதி தோன்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

18 நிமிடம் ஓடும் இந்த விடியோவை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பகவுஸ் நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்கட்டி பேசுகிறார்.

தங்கள் அமைப்பினர் எங்கு கொல்லப்பட்டாலும், அதற்கு பழி தீர்ப்போம் என்றும், தங்கள் அமைப்பில் இருந்து தொடர்ந்து வீரர்கள் தோன்றுவார்கள் என்றும் கூறுகிறார். அந்த விடியோவில் பாக்தாதியுடன் மேலும் 3 பேர் உள்ளனர். அவர்களின் முகம் மங்கலாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2014 ஆண்டு அல் பாக்தாதியின் விடியோ வெளியிடப்பட்டது. அப்போது, இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டது என்று அவர் அறிவித்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!