இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. 100 பேர் பலி.. பலர் படுகாயம்

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல்3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 3 சர்ச் மற்றும் 3 தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் மேலும் மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மூன்றுமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும்.

மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 200 நபருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.