தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்…!


ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ராய்ச்சூர் (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்த தம்பதியின் 20 வயது மகள் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மாணவியை, அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேதாஜிநகர் போலீஸ் நிலையத்தில் மாணவியை காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 16-ந் தேதி மாலையில் நேதாஜிநகரில் உள்ள கோவிலுக்கு பின்புறம் நின்ற மரத்தில் அழுகிய நிலையில் மாணவியின் உடல் தூக்கில் ெதாங்கிய நிலையில் கிடந்தது.

மாணவியின் உடல் அழுகி இருந்ததால், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடனடியாக அனுப்பாமல் போலீசார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, பல மணிநேரம் கழித்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது.

அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனக்கு வாழ பிடிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதாக கூறி நேதாஜிநகர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் மாணவி தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அவர் தான் மாணவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதே நேரத்தில் மாணவியின் தாய், தனது மகள் தற்கொலை செய்யவில்லை, அவரை கற்பழித்து கொலை செய்துள்ளனர். அவள் எழுதியதாக கடிதமும் எழுதி வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டு கூறினார். மேலும் தனது மகள் கற்பழிக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்று கூறி நேதாஜிநகர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.

இதுபற்றிய தகவல் வெளியானதும் ராய்ச்சூர் டவுனில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர். அதே நேரத்தில் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை உடனடியாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்த போலீசாருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, மாணவி தற்கொலை வழக்கில் நேற்று திடீர் திருப்பமாக, அவள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக நேதாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

அதே நேரத்தில் மாணவி கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று ராய்ச்சூர் டவுன், புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சமூக வலைதளங்களிலும் மாணவிக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், என்ஜினீயரிங் மாணவி சாவு தொடர்பாக சுதர்ஷன் யாதவ்(வயது 27) என்பவரை நேதாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான சுதர்ஷன் யாதவை, அந்த மாணவி காதலித்தாரா?, அவர் தான் கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் மாணவி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருப்பதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவி கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!