வெறிச்சோடிய வாக்குச்சாவடி… தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்..!


அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் மணப்பாறை அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இங்குள்ள நகராட்சி 3-வது வார்டு பகுதியில் தாய் கிராமமான செவலூர், சங்கமரெட்டியபட்டி கிராமங்கள் உள்ளன.

இதில் சங்கமரெட்டியபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இங்கு வசதிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளில் ஒன்றுக்கு கூட குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

இங்கு வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழிப்பட்டிக்கு செல்லவேண்டும். அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து சாலையின் சுவடே தெரியாத அளவில் காணப்படுகிறது.

இதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தேர்தல் காலத்திலாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.

இங்கு 180 வாக்குகள் உள்ளன. அவர்கள் செவலூரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!