பேச்சு எல்லை மீறி செல்லுகிறது.. ராகுல் என்னை கேலி செய்கிறார்- பிரதமர் மோடி வருத்தம்..!


தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கேலி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மராட்டிய மாநிலத்தில் அக்லுச் என்ற ஊரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வாரிசு அரசியல் உள்ளவர்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள்.

என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரே இனத்தையே களங்கப் படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இனியும் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள்.

உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது.

இந்த தொகுதியில் முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போட்டியிட்டார். இந்த தடவை அவர் இங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

நீங்கள் இங்கு கடல்போல் திரண்டு இருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் காவி கொடி பறக்கிறது. சரத்பவார் ஏன் இங்கிருந்து ஓடினார் என்பது உங்களை பார்த்தபிறகுதான் தெரிகிறது.

நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டை வழி நடத்த வேண்டும் என்றால் வலிமையான தலைவர் வேண்டும்.

மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால்தான் வலிமையான தலைமை கிடைக்கும். வாரிசுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!