பல்லாவரம் 4 பேர் கொலை வழக்கில் பொலீஸாரிடம் சிக்கியது முக்கிய ஆதாரம்…!


பல்லாவரம் அருகே உள்ள பம்மல் திருவள்ளூவர் நகர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் என்ற பிரகாஷ் (வயது42). தாய் சரசுவதி (55), மனைவி தீபா (36), மகன் ரோஷன் (8), மகள் மீனாட்சி (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

தாமோதரன் அருகில் உள்ள துருவன் என்ற இடத்தில் சிறிய அளவில் ஜவுளிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

அவரிடம் ஜவுளி வாங்கியவர்கள் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் கடன் வாங்கி ஜவுளி வியாபாரத்தை தொடர்ந்தார். என்றாலும் அவரால் மீள முடியவில்லை.

நஷ்டம் ஒரு பக்கமும் கடன் தொல்லை ஒரு பக்கமும் அவரை நெருக்கியது. குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டார். தன்னால் தாய், மனைவி, குழந்தைகள் கஷ்டப்படுவதை பார்த்து அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வந்த தாமோதரன் மன உளைச்சலுடன் காணப்பட்டார். கடன் தொல்லையும், வியாபார நஷ்டமும் அவரை நிம்மதி இழக்கச் செய்தது.

அப்போது குடும்பத்துடன் சாவது என்ற விபரீத முடிவு எடுத்தார். இன்று அதிகாலையில் எழுந்த தாமோதரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாய், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரையும் ஒவ்வொருவராக கழுத்தை அறுத்தார்.


இதில் கழுத்து நரம்பு அறுந்து 4 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்தார். அவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இன்று காலையில் தாமோதரனின் மாமியார் பானுமதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது 5 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து 5 பேரையும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது தாய் சரசுவதி, மனைவி தீபா, மகன் ரோஷன், மகள் மீனாட்சி ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

தாமோதரன் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாமோதரன் வீட்டில் சோதனையிட்டபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்து இருப்பதாக எழுதி இருந்தார். ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்டு வியாபாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!