`உங்களை மறக்க மாட்டேன்’ – போலீஸாருக்குத் தமிழில் நன்றி கூறிய சூடான் மாணவன்

ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் முகமது அல் முஸ்தபா (வயது 26). கடந்த 2016-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம். படிப்பதற்காக கல்வி விசாவில் இந்தியா வந்தார். ஒரு வருட படிப்பை முடித்து விட்டு கடந்த 2017-ம் ஆண்டே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய இவர், பாடத்தில் ‘அரியர்’ இருந்ததாலும், நாடு திரும்ப பணம் இல்லாததாலும் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்தார்.

இங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தார். மேலும் பணத்திற்காக சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கையில் அரிவாளுடன் இருந்த முகமது அல் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது மாங்காட்டில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் கமிஷனர் பேசியதில், அவர் வறுமை காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், தான் நாடு திரும்ப உதவும்படியும் கேட்டார்.

இதையடுத்து, கமிஷனரின் ஆலோசனைபடி, சூடான் வாலிபர் நாடு திரும்ப உரிய ஏற்பாடுகளை மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் மெரினா இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதையடுத்து, சூடான் வாலிபர் முகமது அல் முஸ்தபா நாடு திரும்புவதற்காக போலீஸ் வழக்கு, விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்களை களைந்த போலீசார், தனிநபர் ஒருவர் உதவியுடன் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட் எடுத்து கொடுத்து நேற்று மதியம் பத்திரமாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சூடான் வாலிபர் போலீசாரின் இந்த உதவிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி, தனது குடும்பத்தை காண சந்தோஷமாக சொந்த நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.