`உன்னை யாராவது பார்த்தால்கூட ரத்தத்தை உறிஞ்சுடுவேன்!’ – காதலியை எரித்துக் கொன்ற காதலன்

கேரளாவில் உடனடியாக திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்தி தீ வைத்து எரித்ததால், அந்தப் பெண் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்.

திருச்சூர் மாவட்டம் செய்யாரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நீத்து. இவர், இன்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். நீத்துவை நித்தீஷ் என்ற தனியார் நிறுவன ஊழியர் காதலித்து வந்துள்ளார். நீத்துவின் தாயார் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டதால், மாமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். நீத்துவின் வீட்டுக்கு நேற்று வந்த நித்தீஷ் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, நீத்து ரத்த வெள்ளத்தில் தீயில் கருகிக் கிடந்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் நித்திஷைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நித்திஷின் பையில் இருந்த விஷப் பாட்டிலையும் கைப்பற்றினர். காதலியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்பது நித்திஷின் எண்ணமாக இருந்துள்ளது. தற்போது, போலீஸ் பிடியில் உள்ள நித்திஷ், `இருவரும் மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும் தன்னை விட்டு நீத்து ஒதுங்க ஆரம்பித்ததால் கொலை செய்தேன் ‘என்று கூறியுள்ளார்

நீத்து குறித்து ஏராளமான டிக்-டோக் வீடியோக்களையும் நித்திஷ் எடுத்துள்ளார். `the momu vampire’ என்ற பக்கத்தில் நீத்து குறித்த ரொமான்டிக் வீடியோக்களை நித்திஷ் அப்லோடு செய்துள்ளார். ஒரு வீடியோவில் “2016- ம் ஆண்டு முதல் நீ எனக்குச் சொந்தம். உன்னை யாராவது பார்த்தால் கூட அவர்களை ரத்தத்தை உறிஞ்சிக் கொலை செய்து விடுவேன். சாகும் வரை நான் உன்னைக் காதலிப்பேன். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீதான் என் அன்புக்குரிய மனைவி” என்று கூறியுள்ளார்.

நித்தீசும் நீத்துவும் காதலித்தது இருவர் குடும்பத்துக்கும் தெரியும் என்று சொல்லப்படுகிறது. இதனால், நீத்துவின் வீட்டுக்கு நித்திஷ் வருவதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. நீத்துவை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தி, ஒரு கேனில் பெட்ரோலையும் சம்பவ தினத்தில் எடுத்துச் சென்றுள்ளார். நீத்துவின் மீது தீ வைப்பதற்கு முன் 12 முறை அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். அதற்கு பிறகே எரித்துள்ளதாக உடல் கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.