செல்போன் கொள்ளையர்களால் இடது காலை இழந்த டாக்டர் – காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்..!


உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்தவர் அக்தர் அலி (வயது54). ஓமியோபதி டாக்டர். இவர் தனது மகளுக்கு மணமகன் தேடுவதற்காக 3 மாதங்களுக்கு முன் மும்பை வந்தார். இதற்காக அவர் மான்கூர்டு பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மதியம் அக்தர் அலி மான்கூர்டில் இருந்து சான்ட்ரஸ் ரோட்டுக்கு மின்சார ரெயிலில் வந்துகொண்டிருந்தார். மதியம் 1 மணியளவில் ரெயில் ரேரோடு நிலையம் வந்தது.

அப்போது அக்தர் அலிக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. ரெயில் உள்ளே சிக்னல் கிடைக்காததால் அவரால் பேசமுடியவில்லை. எனவே அவர் ரெயில் வாசல் அருகே வந்து பேசினார்.

அப்போது அந்த நிலையத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் ஏறினர். அவர்களில் ஒருவர் ரெயில் புறப்படும் நேரத்தில் அக்தர் அலியின் செல்போனை பறித்துவிட்டு பிளாட்பாரத்தில் இறங்கி தப்பி ஓடினார். மற்றொரு வாலிபரை அக்தர் அலி பிடித்து கொண்டார்.

இந்தநிலையில் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது அக்தர் அலியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு, அந்த வாலிபர் குதித்து தப்பி ஓடினார்.

கீழே விழுந்த அக்தர் அலி ரெயில் சக்கரத்தில் சிக்கினார். இதில், அவரது இடது கால் மீது ரெயில் சக்கரம் ஏறியது.

தகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் அக்தர் அலியை மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரின் இடதுகாலை மூட்டுக்கு கீழ் அகற்றினர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செல்போன் கொள்ளையர்களால் ஒரு காலை இழந்த அக்தர் அலி மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

‘என்னை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். கேவலம் செல்போனுக்காக ஏன் என்னை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டீர்கள் என அவர்களிடம் கேட்கவேண்டும். என் வாழ்க்கையே சிதைந்துவிட்டது’ என அக்தர் அலி வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் அவர் ‘ரெயிலில் அடிப்பட்டு வலியால் துடித்து கொண்டு இருந்த போது அங்கு இருந்த பயணிகள் என்னை செல்போனில் படம்பிடித்து கொண்டு இருந்தனர். யாரும் உதவி செய்யவில்லை என விரக்தியுடன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் செல்போனுக்காக டாக்டரை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!