வேல்முருகன் கட்சியில் இணைந்த வீரப்பன் மனைவி – காடுவெட்டி குரு சகோதரி..!


பா.ம.க.வில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை நடத்தி வரும் வேல்முருகனின் கட்சியில் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை இணைந்துள்ளார்.

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான காடு வெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், பண்ருட்டி வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேர்ந்துள்ளனர்.

சென்னையில் நேற்று நடந்த விழாவில் இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பா.ம.க.வில் முன்னணி தலைவராக விளங்கிய காடு வெட்டி குரு அதிரடியாக பேசக்கூடியவர். அவரது பேச்சு பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் காடுவெட்டி குரு சமீபத்தில் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு குருவின் குடும்பத்தினர், பா.ம.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில்தான் பா.ம.க.வில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை நடத்தி வரும் வேல் முருகனின் கட்சியில் குருவின் சகோதரி செந்தாமரை இணைந்துள்ளார்.


இதே போல வன்னியர் சமூகத்தை சேர்ந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், பா.ம.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தார். அவரும் வேல்முருகன் கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கு உதவியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி வேல்முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார்.

பின்னர் திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. குருவின் குடும்பத்தில் ஒருவர் வேல்முருகன் கட்சியில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. காடு வெட்டி குருவின் சகோதரியும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் பா.ம.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே வன்னியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் அளித்த பேட்டி ஒன்றில், ராமதாஸ் குடும்பத்தினருக்கு எதிராக கருத்துக்களை கூறி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வன்னியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ராமதாஸ் குடும்பத்தினருக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளோம்.

ஆனால் பா.ம.க. வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!