சமரசம் பேச அழைத்து ரவுடி அடித்துக் கொலை – ஒரு மாதத்துக்குப் பின் அம்பலமானது..!


காரைக்கால் புதுநகரை சேர்ந்த ரகமத்துல்லா மகன் காஜா செரீப் (வயது 25). இவர் மீது காரைக்கால் மற்றும் தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஜா செரீப் கடந்த (பிப்ரவரி) மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். சில நாட்களிலேயே அதாவது பிப்ரவரி 26-ந் தேதி முதல் அவர் மாயமானார்.

இது குறித்து அவரது தந்தை ரகமத்துல்லா காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் துப்பு துலங்குவது போலீசுக்கு சவாலாக இருந்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். காஜா செரீப்பின் நண்பர் காரை கோவில்பத்துவை சேர்ந்த சிவா என்கிற சிவநேசனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் காஜா செரீப் கொலை செய்யப்பட்டதாக போலீசில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சில மாதங்களுக்கு முன் காரைக்கால் சிறையில் இருந்தபோது காஜாசெரீப்புக்கு அங்கிருந்த சிவநேசன் (27), ஆனந்த் (26), விவேக் (26), உமாமகேஸ்வரன் (28), செல்வமுத்துகுமார் (27) ஆகிய ரவுடிகளோடு பழக்கம் ஏற்பட்டது. இதில் விவேக்குக்கும், காஜா செரீப்புக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்தநிலையில் 5 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகும் காஜா செரீப், விவேக் ஆகிய இருவரும் தொடர்ந்து விரோதப்போக்குடன் இருந்து வந்தனர். இதை அறிந்த விவேக், சிவநேசனுடன் சேர்ந்து, காஜா செரீப்பை சமரசம் பேசுவது போல் அழைத்து, கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி கோட்டுச்சேரி ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு, காஜா செரீப்பை விவேக் நைசாக பேசி அழைத்துச்சென்றார்.

அங்கு சிவநேசன், ஆனந்த், உமாமகேஸ்வரன், செல்வமுத்துகுமார் ஆகியோருடன் சேர்ந்து இவர்களும் மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் சிவநேசன், ஆனந்த் சேர்ந்து காஜா செரீப்பை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்க அந்த வீட்டு வாசலில் சுற்றுச்சுவர் அருகில் குழி தோண்டி காஜா செரீப்பின் உடலை புதைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஒரு மாதத்துக்குப் பின் தற்போது இந்த கொலை சம்பவம் அம்பலமாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் ஆகியோர் காஜா செரீப் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சிவாவை அழைத்துச்சென்று, புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட செய்தனர். தாசில்தார் முன்னிலையில் அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது எலும்புக்கூடு சிக்கியது. அதை மரபணு சோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் சிவநேசனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த ஆனந்த் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விவேக், உமாமகேஸ்வரன், செல்வமுத்துகுமார் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமாதானம் பேசுவது போல் அழைத்துச் சென்று ரவுடியை அடித்து கொலை செய்து, வீட்டு வாசலில் உடலை புதைத்த சம்பவம் ஒரு மாதத்துக்குப் பின் அம்பலத்துக்கு வந்துள்ளது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நடந்த இந்த கொலை சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!