`என் சாவுக்கு மனைவியும், மகளும்தான் காரணம்!’- டைரியில் எழுதி உயிரை மாய்த்த டிரைவர்

போலீஸ் தாக்கியதால் டைரி எழுதிவைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் பலியானதாக உறவினர்கள் ஆர்.டி.ஓ.விடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றதாக மனைவி புகார் கொடுத்ததால் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவருக்கும் விஜயரூபாவிற்கும் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். விஜயரூபா அஞ்சுகிராமம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். விஜயரூபா வேலைக்குச் செல்வது ராமலிங்கத்திற்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மகளின் பிறந்தநாள் வந்ததை தொடர்ந்து ராமலிங்கம் மனைவி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ராமலிங்கம் அவரது மனைவி விஜயரூபாவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயரூபா அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் ராமலிங்கத்தை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், பின்னர் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வீட்டிற்குச் சென்ற ராமலிங்கம், காவல் துறையினர் தாக்கியதால் தனக்கு வாழப்பிடிக்கவில்லை எனவும் தனது சாவிற்கு மனைவியும் மகளும் காரணம் என டைரியில் எழுதிவைத்து விட்டு நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராமலிங்கத்தின் உறவினர்கள் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். ராமலிங்கம் எழுதியதாகக் கூறப்படும் டயரியையும் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ராமலிங்கத்தின் நடத்தை சரியில்லாததால் அவரது மனைவி பிரிந்து வாழ்வதாகவும் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றதாக அவரது மனைவி புகார் அளித்ததால் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.