பங்குனி உத்திர விழாவில் புல்லட்டுல வந்த முருகன் – புதுவையில் கலகல!


புதுச்சேரியில் நடந்த பங்குனி உத்திர விழாவில் புல்லட் வாகனத்தில் முருகன் பவனி வந்தது பலரையும் கவர்ந்திழுத்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள சின்ன மையிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திரமான நேற்று இக்கோவிலில் பக்தர்கள் 108 காவடி எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற செடல் உற்சவத்தில் லாரி, டிராக்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை உடம்பில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் வரிசையாக இழுத்து வந்தனர்.

அப்போது முருகப்பெருமான் புல்லட் வாகனத்தில் அமர்ந்து கொண்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இது அங்கு கூடியிருந்த பக்தர்களை ஆச்சர்யப்படுத்தியது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் முருகப்பெருமானுக்கு தலைக்கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. முருகன் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வை புகுத்திய கோவில் நிர்வாகத்தை நிச்சயம் பாராட்டலாம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!