நான் அநாதையாகிவிட்டேன் – எத்தியோப்பியா விபத்தில் குடும்பத்தை இழந்த இந்தியர் கண்ணீர்..!


உலகம் முழுவதும் எத்தியோப்பியா விமான விபத்து ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்துவிட்டனர். கனடாவைச் சேர்ந்த 18 பேர், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர், கென்யாவைச் சேர்ந்த 32 பேர் என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மரணத்தைத் தழுவினர். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரிலிருந்து நேற்று காலை 8.38 மணியளவில் போயிங் – 737 ரக விமானம் கென்யா தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் விமான விபத்துக்குள்ளானது குறித்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிட்டது. விமானம் எத்தியோப்பிய தலைநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷோஃப்டு (Bishoftu) என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் மேற்கொண்ட 149 பயணிகள் 8 விமானப் பணியாளர்கள் மரணித்தனர்.


இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் அடங்கிய குடும்பம் கென்யாவில் உள்ள ஒரு தீவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தில் கிளம்பினர். 73 வயது முதியவர் பனகேஷ் வைதியா, அவரின் மனைவி 67 வயது ஹன்சினி வைதிய, மகள் கோஷா, மருமகன் தீக்‌ஷித் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள். கோஷா மற்றும் குடும்பத்தினர் கனடாவில் வசித்து வந்தனர். பனகேஷ் மற்றும் அவரது மனைவி, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள். பனகேஷின் மகன் மனந்த் வைதியாவும் கனடாவில் வசித்து வருகிறார்.

விமான விபத்து குறித்து கனடா பிரஸ் நிருபருக்குப் பேட்டியளித்த மனந்த், “என் குடும்பம் மிகவும் உற்சாகத்துடன் கென்யாவுக்குச் சுற்றுலா செல்ல கிளம்பினார்கள். என் தந்தையிடம் இந்த உடல்நிலையில் ஏன் நீங்கள் தீவுக்குச் செல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என் வாழ்நாளில் ஒரு தடவையாவது அது போன்ற த்ரில் இடத்துக்குச் சென்றுவர வேண்டும் என்றார் உற்சாகம் பொங்க. ஆனால் இப்போது அவர் இல்லை. என் குடும்பம் சிதைந்துவிட்டது. என் அம்மா, அப்பா, தங்கை அனைவருமே இறந்துவிட்டனர். நான் அநாதையாகிவிட்டேன். என் ரத்த சொந்தங்களை இழந்துவிட்டேன்’’ என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!