‘என் சாவையும் எதுகை மோனை செய்வீர்கள்!’ – பிரபல பத்திரிகை மீது சீனு ராமசாமி பாய்ச்சல்..!


என் இறப்புச் செய்தி வந்தாலும் அதைவைத்து, ‘சீனு சாவு’ என எதுகை மோனை செய்வார்கள் என விகடன் நிறுவனத்தின் மீது சீனு ராமசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சீனு ராமசாமியின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த திரைப்படம், கண்ணே கலைமானே. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். படம் வெளியாகி விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் படத்திற்கு இதுவரை வந்த எல்லா விமர்சனங்களையும் பார்த்து விட்டேன். விமர்சனங்களை வணங்கி ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஆனந்த விகடன் மட்டும் என்னை கேலி செய்கிறது. வஞ்சனை வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறு செய்து என் கலைவாழ்வை கொலை செய்ய நினைக்கிறது. நையாண்டி செய்கிறது. ஒருமையில் அழைக்கிறது” என மிகவும் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், அதே பதிவில், இனி விகடனுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என கூறியுள்ள சீனு ராமசாமி, என் இறப்புச் செய்தி வந்தால், அதை வைத்தும் ‘சீனு சாவு’ என எதுகை மோனை போட்டு எழுதுவீங்க பாஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகை நிறுவனமாக அறியப்படும் விகடன் மீது இயக்குநர் சீனு ராமசாமி இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!