பால்கோட்டில் இந்தியா குண்டு போட்டது உண்மைதான்’! – ஜெயிஷ் அமைப்பு ஆடியோ வெளியீடு..!


கடந்த 26-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் இந்தியாவில் உள்ள 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பால்கோட்டில் தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெயிஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இந்தியா நடத்திய தாக்குதலால் பால்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்த மரங்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் அதைத்தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ஊடகங்களும் கூறி வந்தன.

‘பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் ஆனால் அதன் சேத விவரங்களை அறிவிக்க முடியாது. அது ஒரு முன்னறிவிப்பிற்கான தாக்குதல் மட்டுமே’ எனப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பால்கோட் தாக்குதலின் போது என்ன நடந்தது என்ற சந்தேகம் அதிகமானது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என இந்திய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ஜெயிஷ் இ அமைப்பு மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் தம்பி மௌலானா அமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மௌலானா பேசிய ஆடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், ‘ எதிரிகள் போர் அறிவித்து எல்லையைக் கடந்து இஸ்லாமிய நாட்டுக்குள் நுழைந்தனர். பால்கோட்டில் உள்ள இஸ்லாமியப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உங்கள் ஆயுதங்களை உயர்த்தி நாம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.

உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன், இந்திய விமானங்கள் நம் அமைப்பின் தலைமையிடங்கள், சந்திப்பு புள்ளிகள் மீது குண்டு வீழ்த்தவில்லை. ஆனால் அவர்கள் இஸ்லாமியப் புனித போருக்காகப் பயிற்சி பெற்று வரும் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த குழந்தைகள் காஷ்மீருக்கு உதவக்கூடியவர்கள். நம் பகுதிக்குள் நுழைந்து பள்ளி மீது தாக்குதல் நடத்தியதன் விளையாக இந்தியாவுக்கு எதிரான போரை அவர்களே ஆதரித்துவிட்டனர்’ என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!