அபிநந்தனை விடுதலை செய்யுங்கள்.. இம்ரான் அரசுக்கு பூட்டோ குடும்பம் கோரிக்கை..!


சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்யுங்கள் என இம்ரான்கான் அரசுக்கு பூட்டோ குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது. அவரை விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அபிநந்தனின் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இதை கண்டித்து பாகிஸ்தானியர்களே குரல் கொடுத்தனர். அவர் போர் கைதியாக இருந்தாலும் பணியில் உள்ள இந்திய விமானி அவரை மரியாதையாக நடத்த வேண்டும். அவர் கொடுத்த பணியை செய்துள்ளார் என குரல்கள் எழுந்தன.


இந்த நிலையில் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ, இந்திய விமானியை விடுவிக்குமாறு இம்ரான் கான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அமைதி, நல்லிணக்கம், கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் இந்திய விமானியை விடுவிக்க வேண்டும் என்பதே என் போன்ற இளம் பாகிஸ்தானியர்களின் கோரிக்கையாகும்.

வாழ்நாள் முழுவதையும் போரிலேயே கழித்து விட்டோம். இனி போர் நடந்து அதில் பாகிஸ்தான் வீரர்களோ இந்திய வீரர்களோ மடிவதை யாரும் விரும்பவில்லை. ஆதரவற்றவர்களின் துணை கண்டமாக நாம் இருக்கக் கூடாது.

அண்டை நாட்டுடன் நம் நாடு அமைதியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அது போல் நாம் சண்டையிட்டுதான் பார்த்தோம். எனவே இந்திய விமானியை விடுவிக்க வேண்டும் என்று பாத்திமா பூட்டோ கேட்டுக் கொண்டார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!