12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய விளையாட்டு வீரரால் அதிர்ச்சி..!!


அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பிப்ரவரி மாதம் சென்றார்.

இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.


அவர் மீது எசெக்ஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அந்த கோர்ட்டின் அரசு தரப்பு துணை வக்கீல் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.


அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் கோர்ட்டில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.-Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!