குஜராத் தேர்தலில் போட்டியிடும் 1828 வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் தெரியுமா?


குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1828 வேட்பாளர்களில் 397 பேர் கோடீஸ்வரர்கள் என இரண்டு தனியார் நிறுவனங்கள் எடுத்த ஆய்வறிக்கையில் தெரிய வந்ததுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இந்த தேர்தலில் 182 தொகுதிகளில் மொத்தம் 1828 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் 977 வேட்பாளர்கள் முதல்கட்ட தேர்தலிலும், 851 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 1828 வேட்பாளர்களில் 1098 பேர் 5 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

119 பேர் எழுதப்படிக்க தெரிந்தவர்கள். 23 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் ஆவர். இந்நிலையில், இரண்டு தனியார் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 397 பேர் கோடீஸ்வரர்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.


அவர்களில் 131 பேர் ரூ. 5 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். 124 பேர் ரூ. 2 கோடியிலிருந்து 5 கோடி வரையிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.

397 பேரில் 142 வேட்பாளர்கள் பி.ஜே.பி., 127 பேர் காங்கிரஸ் கட்சி, 13 பேர் ஆம் ஆத்மி கட்சி, 5 பேர் பகுஜன் சமாஜ் கட்சி, 56 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். மீதி பேர் சிறிய கட்சியை சேர்ந்தவர்கள் ஆகும்.

கோடீஸ்வரர் வரிசையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பான்காஜ் படேல் 231.93 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதல் இடத்தில் வகிக்கிறார். 141.22 கோடி ரூபாய் சொத்துகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜ்யகுரு, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அடுத்த இடங்களை பி.ஜே.பி. வேட்பாளர்கள் சவுரப் படேல் மற்றும் தான்ஜிபாய் படேல் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிர்மாறாக சொத்துகள் எதுவும் இல்லாத 6 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!