தன் உயிரை கொடுத்து மகன் உயிரை காப்பாற்றிய தாய் – அரக்கோணத்தில் நடந்த பரிதாபம்..!


திருத்தணியை சேர்த்த விவசாயி லட்சுமணன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியின் 12 வயது மகன் தனுஷ்.இவர்கள் குடும்பத்துடன் சென்னை செல்ல இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

தான் இரு சக்கர் வாகனத்தை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வருவதாகவும், முன்னால் சென்றுகொண்டிருக்கும்படியும் மனைவியையும் மகனையும் அனுப்பி வைத்தார் லட்சுமணன். நடக்கப் போகும் விபரீதத்தை அறிந்திருந்தால் அவர் அவர்களை முன்னால் அனுப்பியிருக்க மாட்டார்.

கணவர் வரக் காத்திருக்கும் நேரத்தில் நடைமேடைக்கே சென்றுவிடலாம் என ரேவதி எண்ணியது தவறில்லை. ஆனால் அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியும், சிறு சோம்பேறித் தனமுமே அவரது உயிருக்கு உலை வைக்கும் பெருந் தவறாய் முடிந்துவிட்டது.

மகனுடன் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடைக்குச் செல்ல ரேவதி முயற்சித்தார். அப்போது திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் வேகமாக வருவதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டபோதுதான் தான் சுதாரிப்பதற்கான நேரம் கடந்துவிட்டதை ரேவதி உணர்ந்தார்.

அந்தப் பதற்றத்திலும் தனது மகனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வேகம்தான் தாயின் சிந்தனையை ஆக்கிரமிக்க மகனை பலங்கொண்ட வேகத்தில் நடைமேடை மீது ஏற்றிவிட்டார். ஆனால் பரிதாபத்துக்குரிய அந்த தாய்க்கு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நேரம் இல்லாமல் போனது.

ரேவதி நடைமேடையில் ஏறுவதற்குள் வேகமாக வந்த ரயில் மோதியதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். எமன் கண்முன்னே அதிவேகத்தில் உருண்டோடி வந்த நிலையிலும் மகனைக் காப்பாற்றிவிட்டு இறந்தார்.

விநாடிக்கும் குறைவான நேரத்தில் தாயை இழந்து அனாதரவான மகனையும் கண்டு அங்கிருந்த பயணிகள் கண்ணில் பொங்கி வழியும் கண்ணீருடன் செயலற்றவர்களாய் நின்றனர். இடுப்பில் இருந்த கைக்குட்டைகள் கண்களுக்கு இடம் மாறின.

ரேவதி நடைமேடையை அடைய தண்டவாளத்தைக் கடக்காமல் உயர்மட்ட நடைமேம்பாலத்தை பயன்படுத்தியிருந்தால் ஒரு இன்னுயிர் விடைபெற்ற சோகம் நேர்ந்திருக்காது. என தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துவதைத் தவிர அவர்களால் வேறு ஏதும் செய்ய முடியாமல் போனது.

இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன்னர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!