10 ரூபாய் நோட்டுகளுக்கு ஆசைப்பட்டு ரூ.1.24 லட்சம் பறிகொடுத்த விவசாயி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பட்டப்பகலில் வங்கி வாசலில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1.24 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(48). விவசாயியான இவர், நேற்று முன்தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வங்கியில் தனது மகளின் திருமணத்திற்காக 8 பவுன் நகையை ரூ.1.24 லட்சத்துக்கு அடகு வைத்தார். அதற்கான பணத்தை வங்கியில் பெற்றுக்கொண்டு வங்கி வெளியே வந்துள்ளார்.

பின்னர் விவசாயி சந்திரசேகரன் அந்தப் பணத்தை பைக் கவரில் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் விவசாயி சந்திரசேகரிடம் 10 ரூபாய் நோட்டுகளை கீழே வீசி இந்த பணம் உங்களுடையதா? என்று கேட்டுள்ளனர். உடன் சந்திரசேகரன் கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கே நின்ற 2 மர்ம நபர்களும் சந்திரசேகரனின் பைக்கில் இருந்த பணத்தை வங்கி பாஸ் புத்தகத்த்துடன் எடுத்துக்கொண்டு மாயமாகினர். பின்னர் விவசாயி சந்திரசேகரன் தனது பணத்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்களும் மர்ம நபர்களை பல இடங்களின் தேடினர் ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயி சந்திரசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த கஜா புயலின்போது வங்கி வாசலில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா, அதேபோல் முத்துப்பேட்டை பல இடங்களில் போலீசார் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராக்களும் சேதமாகி விட்டதால் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பணத்தை இழந்த விவசாயி சந்திரசேகரன் திருத்துறைப்பூண்டி தொகுதி கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உலகநாதனின் மைத்துனர் என்பது குறிப்பிட்டதக்கது. பட்டப்பகலில் ஏற்பட்ட இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.