“அவனது வாழ்வை மாற்றிய அந்த ஒருநாள்” – தீவிரவாதி ஆதில் குறித்து வேதனை தெரிவிக்கும் சகோதரர்!

தங்களின் விடுமுறையை முடித்துவிட்டு தமிழகம் உட்பட நாட்டின் பல இடங்களில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். கடந்த 14-ம் தேதி அதிகாலை ஜம்முவில் இருந்து புறப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள கேம்ப்புக்கு செல்வதற்காக 78 வாகனங்களில் 2,500 வீரர்கள் புறப்பட்டனர். அவர்களின் பேருந்து பிற்பகல் புல்வாமா மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வந்து மோதியதில் 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதில் முகமது தார் என்ற 19 வயது இளைஞன்தான் கார் முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி இந்தத் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் எனப் பின்னர் வெளிவந்த வீடியோவின் மூலம் தெரியவந்தது.
ஆதில் முகமது தார் பற்றி அவரது சகோதரர் ஃபரூக் தார் நியூஸ் 18 சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆதில் பள்ளியில் படிக்கும்போதே சிறந்த பையன், நன்றாகப் படிப்பான். மிகவும் அமைதியாக இருப்பான். படிப்பைத் தவிர அவனுக்கு வேறு எதுவுமே தெரியாது. நன்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவனது கனவாக இருந்தது.

காஷ்மீரில் உள்ள மக்கள் தங்கள் வாழ்நாளை அமைதியாக வாழவே முடியாது. எப்போதும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இங்கு இருக்கும் குழந்தைகள் வெளியில் சென்றுகூட விளையாட முடியாத சூழல்தான் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் ஆதில் மிகவும் விரக்தியாக வீட்டுக்கு வந்தான். அன்று என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியாது. அன்றைய தினத்துக்குப் பிறகு ஆதிலின் நடவடிக்கைகள் மாறின. படிப்பை நிறுத்திவிட்டு அதிகமாக மசூதிக்குச் செல்லத்தொடங்கினான்.

ஆதில்

எங்களிடம் பேசுவதை நிறுத்தினான். அவன் பழைய நிலைக்கு வரவேண்டும் என்றுதான் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பினார்கள் ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்த பிறகு அவனைக் காணவில்லை. நாங்கள் பல இடங்கள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. அதன் பிறகு போலீஸிலும் புகார் அளித்திருந்தோம். அவன் இப்படி ஒரு கொடூரமான செயலில் ஈடுபடுவான் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஒரு நாள் காவலர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனையிட்டபோதுதான் அதில் எங்கு சென்று மாட்டிக்கொண்டான் என தெரியவந்தது. அவன் ஒரு தீவிரவாத கூட்டத்தில் இணைந்துவிட்டான் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அன்றிலிருந்து எங்களின் வாழ்க்கை முற்றிலும் அழிந்து போய்விட்டது. என் அம்மாவும் அப்பாவும் நடைப்பிணமாக மாறிவிட்டார்கள். காவல்துறையினரிடம் நாங்கள் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டோம். இருந்தும் அவர்கள் தினமும் வந்து விசாரித்துச் செல்கின்றனர். என் சகோதரனால் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் தங்களின் தந்தையை இழந்துள்ளனர். இவை அனைத்தும் எங்களுக்குப் புரிகிறது. காஷ்மிரீல் ரத்தம் ஓடாத நாள் வரவேண்டும். நாங்கள் ரத்தம் சிந்தியது போதும்’ எனத் தெரிவித்துள்ளார். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.