சாலையில் பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமி – கால் இடுக்கில் வைத்து காப்பாற்றிய யானை..!


லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின் மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும் பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று திரும்பினார்கள்.

அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்தபோது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது. நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் வரிசையாக நின்றன.

அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது, மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக் கடந்துள்ளது.

இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக் கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி, மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.

அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது. இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும், இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச் சென்றன.

அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே, சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்துவைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.

அதன்பின் அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள் அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி மருத்துவமனையில் சேர்த்தனர். பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே இருந்ததால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன் காணப்பட்டார் இவ்வாறு கூறினர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!