பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை – ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்..!


காஷ்மீரில் இயங்கி வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பழிதீர்க்க வேண்டும் என அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அந்த தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர். இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் புலவாமாவில் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள பிங்க்லான் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியை ராணுவம் மற்றும் மாநில போலீசின் அதிரடிப்படை அடங்கிய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அங்கு தேடுதல் வேட்டையை வீரர்கள் தொடங்கினர். அப்போது அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது.

சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த கம்ரான் கடந்த 14-ந் தேதி பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார். அது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சண்டையில் வி.எஸ்.தொண்டியால் என்ற ராணுவ அதிகாரி மற்றும் ஷியோ ராம், ஹரிசிங், அஜய் குமார் ஆகிய ராணுவ வீரர்களும், மாநில போலீஸ் ஏட்டு ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். அத்துடன் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் சில ராணுவ அதிகாரிகள் உள்பட 9 வீரர்கள் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கிராமவாசி ஒருவரும் உயிரிழந்தார்.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் ஜம்மு பகுதியில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.

அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!