டூத் பிரஷ்ஷை தெரியாம விழுங்கிட்டேன் – டாக்டரை அதிர வைத்த பெண்..!


பெண்ணின் உணவுக்குழாயில் சிக்கிய டூத் பிரஷ் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. விநோதமான இந்தச் சம்பவம் மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் நடந்துள்ளது. ஷில்லாங் அருகே உள்ள லோயர் மாப்ரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கம்போல காலையில் கண்விழித்ததும் பல் துலக்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவர் பல் துலக்குவதற்குப் பயன்படுத்திய டூத் பிரஷ்ஷை விழுங்கிவிட்டாராம். கவனக்குறைவால் அவர் விழுங்கிய டூத் பிரஷ் அவரது உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, அவருக்குத் தொண்டையிலும் வயிற்றுப்பகுதியிலும் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பெண் டூத் பிரஷ்ஷை விழுங்கிய தகவலை தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். டூத் ப்ரஷ்ஷை விழுங்கிவிட்டதாக கூறிய தகவலை முதலில் மருத்துவர்கள் நம்பவில்லை. ஆனால், அந்தப் பெண்ணை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பிரஷ்ஷை எடுக்க முயன்றனர். ஆனால், அது பயனளிக்கவில்லை. அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது குறித்து ஆலோசித்த மருத்துவர்கள், எண்டோஸ்கோப்பி மூலம் பிரஷ்ஷை அகற்றினர்.

டூத் பிரஷ்ஷை அகற்றிய மருத்துவர் ஐசக் ஷ்யாம் கூறும்போது,“விசித்திரமான ஒரு பிரச்னைக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது இதுவே முதல்முறை. இது எங்கள் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.

உணவுக்குழாயில் சிக்கிய டூத் பிரஷ்ஷை அகற்ற முதலில் சிரமப்பட்டோம். ஆனால், எண்டோஸ்கோப்பி உதவியுடன் வாய் மூலமாக டூத் பிரஷ்ஷை அகற்றிவிட்டோம். அரை மணி நேரத்தில் இந்த சிகிச்சை முடிந்துவிட்டது என்றால் கொஞ்சம் சவால் நிறைந்ததாகவே இருந்தது. தற்போது அந்தப் பெண் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்” என்றார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!