பிரியாணி டு இயக்குநர் வரை நீண்டகாதல்!- சந்தியா, பாலகிருஷ்ணனின் வெளிவராத தகவல்கள்

`என்னுடைய பெயரை சந்தியா பச்சை குத்தியிருந்தார்’ என்று பாலகிருஷ்ணன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு சைதாப்பேட்டை பகுதியில் பிரியாணி கடை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி டூவிபுரம், 5-வது தெருவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன், சினிமா இயக்குநராக உள்ளார். இவர், சென்னை ஜாபர்கான்பேட்டை, பாரிநகர், காந்திதெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தார். இவரின் மனைவி சந்தியா. நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சந்தியாவைக் கொலை செய்த குற்றத்துக்காக பாலகிருஷ்ணனை பள்ளிக்கரணை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியாவின் கை, கால்களை மட்டுமே வைத்து இந்த வழக்கை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், ராஜேந்திரன் கொண்ட தனிப்படை போலீஸார் திறம்பட விசாரித்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கரணை போலீஸாருக்கு சவாலாக இருந்த இந்த வழக்கு துப்பு துலக்கிய தனிப்படை போலீஸார் இன்னமும் சந்தியாவின் தலை, இடதுகையுடன் கூடிய உடல்பாகங்களை சோர்ந்துப்போகாமல் தேடிவருகின்றனர்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் முகாமிட்டுள்ள போலீஸார், தினந்தோறும் புதிய சவால்களைச் சந்தித்துவருகின்றனர். இரவு தூக்கமின்றி சிரமப்படும் தனிப்படை போலீஸாரின் பணி பாராட்டுதலுக்குரியது. நேற்றிரவுகூட வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்தில் அதிகாலை 3 மணிவரை தலை மற்றும் உடல்பாகங்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மூன்று மணி நேரம் தூக்கத்துக்குப்பிறகு இன்று காலை 7 மணிக்கே பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீண்டும் தேடுதல் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் போலீஸாரிடம் சந்தியா குறித்து முக்கிய தகவலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “சந்தியாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவரை திருமணம் செய்த நாள் முதல் கொலை செய்வதற்கு முன்பு வரை பாசமாக இருந்தேன். என்னை எப்போதும் சந்தியா மறக்கக்கூடாது என்பதற்காக உடலில் மூன்று இடங்களில் அவர் பச்சைக் குத்தியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய பெயரை சந்தியா தன்னுடைய வலது பக்கத்தில் உள்ள மார்பு பகுதியில் பச்சை குத்தினார். அப்போது அவர் வலியால் துடித்தார். அதை எனக்காகத் தாங்கிக் கொண்டார். அந்தளவுக்கு என்மீது அவள் பாசமாக இருந்தார். நானும் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் சென்னையில் உழைத்தேன். நான் பிரியாணி கடை நடத்தியதிலிருந்து சினிமா இயக்குநர் வரை இருந்த காலகட்டத்தில் சந்தியாவின் மீதான என் காதல் குறையவில்லை.

நாங்கள் சிவனை வணங்குவோம். இதனால் அவரின் வலது கையில் சிவனையும் பார்வதியையும் பச்சைக் குத்தினார். சிவனாக நானும் பார்வதியாக சந்தியாவும் எப்போதும் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் விதிவிளையாடிவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்த பாலகிருஷ்ணனுக்கு சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் சென்னையில் பிரியாணி கடை ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது அந்தக் கடையை இன்னொருவர் நடத்திவருகிறார்.

தொடர்ந்து, சந்தியா கொலை வழக்கில் பாலகிருஷ்ணனை விசாரித்த தகவல் கிடைத்ததும் அவரின் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் பாலகிருஷ்ணன் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் நம்பிக்கையுடன் கூறினர். ஆனால், பாலகிருஷ்ணன், போலீஸாரிடம் எல்லா தகவல்களையும் கூறிவிட்டார். இந்த நிலையில், பாலகிருஷ்ணனை ஜாமீனில் எடுக்க அவரின் தரப்பு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லகிருஷ்ணனிடம் சினிமா வாய்ப்புகள் கேட்டு ஏராளமான புதுமுகங்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு `காதல் இலவசம்’ படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணன். புதிய படத்துக்கான கதை ஒன்றை அவர் தயாராக வைத்துள்ளார். ஆனால் அதற்குள் நடக்கக்கூடாது எல்லாம் நடந்துமுடிந்துவிட்டதாக விசாரணை முடிவில் பாலகிருஷ்ணன் போலீஸாரிடம் கூறியுள்ளார். பாலகிருஷ்ணனின் மனதைரியம் முதலில் போலீஸாருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சந்தியா குறித்து விசாரித்தபோதுகூட அவர் எந்தவித பதற்றமும் இன்றி சர்வசாதாரணமாக பதிலளித்துள்ளார். சந்தியாவின் வலது கையை மட்டும் அவர் துண்டித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை அவர் சொல்ல மறுத்துவிட்டார் என்கின்றனர் போலீஸார்.

சந்தியாவின் தலையையும் இடது கையோடு கூடிய உடல்பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, கண்ணன், ராஜேந்திரன், காவலர்கள் கலைச்செல்வன், பாஸ்கரன், செல்வராஜ், ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குமார் ஆகியோர் இரவு பகல் பாராமல் பெருங்குடி குப்பைக் கிடங்கிலேயே தவம் கிடக்கின்றனர். கடந்த 21-ம் தேதி முதல் சந்தியா அடையாளம் காணப்பட்ட நாள்வரை (பிப்ரவரி 6-ம் தேதி) வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்திலிருந்து பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட குப்பையின் உயரம் மட்டுமே 20 அடிக்கு மேல் உள்ளது. அதில் 15 அடி வரை தனிப்படை போலீஸார் சந்தியாவின் தலை மற்றும் உடல்பாகங்களைத் தேடியும் கிடைக்கவில்லை. மோப்ப நாய் டைசனாலும் உடல்பாகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெங்களுருவிலிருந்து இன்னொரு மோப்ப நாயை வரவழைக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதே சமயத்தில் இதுவரை கிடைத்த சந்தியாவின் கை, கால்கள், இடுப்புக்குக் கீழ் உள்ள பாகங்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சந்தியாவின் கொலை வழக்கில் உள்ள சவால்களை சமாளிக்க பள்ளிக்கரணை போலீஸார் புதிய அஸ்திரத்தை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.