கள்ளக்காதல் விவகாரம் – ஓடும் விமானத்தில் இளம் தம்பதிகளால் அதிர்ச்சி..!!


ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை கடைபிடிக்கும் நம் நாட்டில் கள்ளக்காதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஒரு பெண் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பாள். கணவனை மட்டும் இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க மாட்டாள் என்று நம்புகிறோம்.

அயல் நாடுகளில் கூட கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் கள்ளக்காதல் புகுவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நடுவானில் நடந்த இந்த சண்டை ஒரு சாட்சி.

ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் தம்பதி தங்கள் பச்சிளம் குழந்தையுடன் தோஹா நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவுக்கு கத்தார் நாட்டு விமானத்தில் பயணம் செய்தனர்.

அந்த விமானத்தில் இந்த தம்பதிகளுடன் 284 பயணிகள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. பெரும்பாலான பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. மனதுக்குள் பல நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு சந்தேகம் தான் உறங்கவிடாமல் ஆக்கியது.

தன்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த கணவனின் செயல்பாட்டில் ஒரு மாறுதல் தெரிந்தது. அடிக்கடி செல்போனில் யாரிடமோ மணிக்கணக்கில் ரகசியமாக பேசுவதும் அருகில் செல்லும்போது பேச்சை மாற்றுவதும், செல்போனை தொடவிடாமல் விரட்டுவதும் என்னமோ நடக்கிறது என்ற சந்தேக தீயை மனதுக்குள் கொளுந்துவிட்டு எரிய வைத்தது.

விமான பயணத்தின் போதும் அதே சந்தேகம். அருகில் இருந்த கணவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இதுதான் தக்க தருணம் என்று அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனை நைசாக எடுத்து பார்த்தார்.


அப்போது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் மிக தீவிரமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நம்ம ஊர் பெண்ணாக இருந்தால் ‘மவனே, வீட்டுக்கு வா, வச்சுக்கிறேன்’ என்று வீட்டுக்கு போகும் வரை பொறுமையாக இருப்பாள்.

ஆனால் ஈரான் பெண்ணால் பொறுத்திருக்க முடியவில்லை. கோபம் கொந்தளித்தது. அப்போதே கணவனை ஒருகை பார்த்திட முடிவு செய்தார்.

சாதாரணமாக இருந்து சண்டை போட்டால் சரிப்பட்டுவராது என்று கருதினாள். விமானத்தின் பாருக்கு சென்று நாலு ரவுண்டு போட்டு கிக்கை ஏற்றிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள்.

தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பி அவ யாரு? எத்தனை நாளா இது நடக்குது..? என்று ஆவேசமாக சத்தம் போட்டாள். அரைகுறை தூக்கத்திலும் நிலைமையை புரிந்து கொண்ட அந்த பரிதாபத்துக்குரிய கணவன் என் செல்போனை நீ ஏன் எடுத்தாய்? என்று கேட்டு தகராறு செய்ய சண்டை ஆக்ரோ‌ஷம் ஆனது. தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழித்தனர். விமானத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டது.

விமான பணிப்பெண்கள், பைலட் ஆகியோர் சென்று இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால் சண்டை நின்றபாடில்லை. இதனால் மற்ற பயணிகள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

வேறு வழியில்லாமல் பைலட்டுகள் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அப்போது அந்த விமானம் சென்னையின் மேல் பறந்து கொண்டிருந்தது.

உடனே அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்க அனுமதித்தனர். இதையடுத்து இரவு 10.15 மணிக்கு அந்த விமானம் தரை இறங்கியது.

பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தம்பதியை இறக்கி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரவு 12.10 மணிக்கு அந்த விமானம் பாலி நகருக்கு புறப்பட்டு சென்றது.

கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த சண்டை மற்றும் தம்பதிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது பற்றி டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் அந்த தம்பதியிடம் பேசி சமரசம் செய்து கோலாலம்பூர் வழியாக செல்லும் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!