சந்தியாவை நான் கொலை செய்யல’ – சினிமா இயக்குநர் குபீர்..!


`சந்தியாவை நான் கொலை செய்யவில்லை’ என்றும் `மீடியாக்களிடம் என்னைப் பேச அனுமதியுங்கள்’ என்றும் போலீஸாரிடம் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில், கடந்த 21-ம் தேதி கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் யாருடையது என்பதை பள்ளிக்கரணை போலீஸார் கண்டறிந்தனர். நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவை, அவரின் கணவரான சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் கொடூரமாகக் கொலைசெய்து, உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி, குப்பைத்தொட்டிகளிலும் அடையாற்றிலும் வீசியதாக போலீஸிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, பாலகிருஷ்ணனைக் கைதுசெய்த போலீஸார், சந்தியாவின் உடல் பாகங்களைத் தேடிவருகின்றனர். கை, கால்களைத் தொடர்ந்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள அடையாற்றின் கரையோரத்தில், துண்டிக்கப்பட்ட இடுப்புப் பகுதியை போலீஸார் மீட்டனர். சந்தியாவைக் கொலைசெய்த பாலகிருஷ்ணன், அவரின் உடலை நிர்வாணப்படுத்தியதாக போலீஸாரிடம் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள இடுப்புப் பகுதியில் உள்ளாடை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். பாலகிருஷ்ணனிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று தெரியுமா என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, `தெரியாது’ என்று அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து, பிப்ரவரி 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன், `நான் சந்தியாவைக் கொலை செய்யவில்லை’ என்று கூறியபடிச் சென்றார். அதோடு, `என்னை மீடியாவில் பேச அனுமதியுங்கள்’ என்று போலீஸாரிடம் கேட்டுள்ளார். ஆனால், போலீஸார் அனுமதிக்காமல் அவரை வாகனத்தில் ஏற்றி புழல் சிறைக்குக் கொண்டுசென்றனர்.

சந்தியாவை கொலை செய்யவில்லை என பாலகிருஷ்ணன் திடீரெனக் கூறியிருப்பது, இந்த வழக்கில் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. பாலகிருஷ்ணனின் அம்மாவும் தன்னுடைய மகன் கொலை செய்யவில்லை என்று நேற்று தெரிவித்துள்ளார். இதனால், சந்தியாவைக் கொலைசெய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்


இதற்கிடையில், பாலகிருஷ்ணன்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பள்ளிக்கரணை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “எந்தக் குற்றவாளியும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். அதுபோலதான் பாலகிருஷ்ணனும், தான் கொலைசெய்யவில்லை என்று கூறியிருக்கிறார். பாலகிருஷ்ணன் கூறிய இடத்தில்தான் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. சம்பவத்தன்று சந்தியாவுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே நடந்த தகராறை வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார்.

அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து சந்தியாவின் உடல் பாகங்களை வெளியில் கொண்டுசெல்லும் சிசிடிவி காட்சிகளும் எங்களுக்கு சிக்கியுள்ளது. அதோடு, மகளிர் விடுதியில் தங்கியிருந்த சந்தியாவை போனில் அழைத்துப் பேசியிருக்கிறார் பாலகிருஷ்ணன். எனவே, எங்களின் விசாரணை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான் பாலகிருஷ்ணைக் கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம்” என்றனர்.

பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் விசாரணை முடிந்து, நீதிமன்றத்துக்கு பாலகிருஷ்ணனை அழைத்துச்சென்றபோது, ‘சிறைக்குப் போய்விட்டுவருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் நான் கொலை செய்யவில்லை என்று கூறிய பாலகிருஷ்ணனின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நடிகர் வடிவேல், ‘தலைநகரம்’ படத்தில் ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’ என்று சொல்வார். அதுபோல சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனும் கூறியிருக்கிறார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!