கும்பமேளாவில் இதுவரை 50 ஆயிரம் பேர் வரை மாயம் – கதறியழுத உறவினர்கள்.!


பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் அரை கும்பமேளா கடந்த 15-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 49 நாட்கள் நடைபெறும் கும்பமேளா விழா மார்ச் மாதம் 4-ந் தேதி நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடி, பிராத்தனை செய்து வருகிறார்கள். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மௌனியா அமாவசையான நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 50 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. காணாமல் போனோர் குறித்த அறிவிப்பு பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 300 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி கேபி.சிங் தெரிவித்தார்.

போலீசார் உதவியுடன் இதுவரை கும்பமேளாவில் காணாமல் போன 70 குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினருடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

முந்தைய கும்பமேளாக்களில் காணாமல் போனோர் பல ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒன்றிணைந்தனர். இந்நிலையில், தகவல் தொடர்பு முன்னேற்றம் காரணமாக இந்த கும்பமேளாவில் தொலைந்தவர்கள் விரைவில் குடும்பத்தோடு இணைவர் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலம் காணாமல் போனவர்களின் விவரங்களை போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என கூறப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!