எங்களை சாகவிடுங்கள்.. வேலூர் ஜெயிலில் முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம்..!


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவருடைய வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசினார்.

கடந்த 2-ந்தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் முருகன் தனது அறையில் சாமிபடங்களை வைத்துள்ளார். அந்த அறையில் சிறை அதிகாரிகள் ஷூ கால்களுடன் சென்று அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளதால் அவரை அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!